
கனவு தேசத்திற்குள் நுழைந்து
தூரிகையெடுத்து
ஓவியம் வரைகின்றேன்...
நகாசு தொடுதல்களில்
வண்ணங்கள்
மாயம் பூசி ஜாலங்கள் புரிகின்றன...
நட்சத்திர மின்னல்களில்
நாட்டியாஞ்சலி நடைபெறுகின்றது,
காணாத அருவியொன்று
கரை புரண்டோட
காதலர்களின் மெல்லிய ஆடை
தெள்ளிய நீரில் நழுவிச் சாய
நாணம் நழுவுகின்றதென
எழுதும் கவிஞனை
நானெப்படி வசை பாடுவது ?
வண்ணங்களைக் குழைத்து
வாரியிறைக்கிறேன் அவன் மேல்
அதைக் கவிதைக்குள் இடம் மாற்றி
பட்டாம் பூச்சிகளைப் பறக்க விடுகின்றான்,
வேறுவழியில்லாமல்
பூக்களையெல்லாம் வரைகின்றேன்...
தேனீக்களும் அடம்பிடித்து
ஓவியத்திற்குள் நுழைந்து
இடம் பிடிக்கின்றன
கூட்டிற்காக வரைந்த மரங்களில்
மந்திகள் இடம் தாவிக் கொண்டாட,
இளங்காற்று வந்தென்னை
இருக்கையில் சாய்க்க...
நெட்டியெடுக்கும் அவளை மட்டும்
எப்படி மறந்து போனேன்
ஓவியத்தில் என்றும் நிலையாயிருத்த !
- மு.முகமதுபாட்சா*
27/04/2017
No comments:
Post a Comment