Tuesday, 24 April 2018

சாண்டில்யன் கதை புத்தகம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அந்தப் பழைய புத்தகத்தின் 
18ம் பக்கம் உனக்கே உனக்கானது
அங்குதான் உன் ஒட்டுப் பொட்டு 
இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது

2ம் பக்கத்தின் சில வரிகளை 
நீ கோடிட்டு வைத்திருக்கிறாய்...
அங்கிருந்து செல்லும் வரைந்த அம்பு
23ம் பக்கத்தின் 
சில வரிகளோடு சேர்ந்து விடுகிறது...

காதலைச் சொல்ல நீ 
கற்றுக் கொண்ட தந்திரத்திற்கு 
சாண்டில்யன் துணை போனதொன்றும் 
ஆச்சரியமில்லை

72ம் பக்கத்தில் உன் விரல்களை 
என் விரல்களோடு பின்னத் தொடங்கினாய்
அங்கிருந்துதான் உன் கண்களையே 
நான் வாசிக்கத் தொடங்குகிறேன்...

உன்னிதழ் வரிகளில் என்னிதழ் வரிகளைப் பொருத்தி
கவிதைகளை நெய்கிறேன்...
நாடாவாக உன் விழிகள் அலைகின்றன

ஊடையும் பாவுமாக ஓடிக் களித்து
அறுக்கும் போது கிழிந்த துணி
கவிதைகளோடு கந்தலாகி கீழே கிடக்கிறது

கடைசி பக்கத்தில் நீ வரைந்த இதயம்
இன்னமும் 
துடித்துக் கொண்டேதான் இருக்கிறது...

சுபம்

சாண்டில்யன் எழுதாத இந்தக் கதை புத்தகம்
கவிதை புத்தகமாக 
என்னிடம் மட்டுமே இருக்கிறது

நீ யாருடைய கவிதையை 
இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறாய்?

- மு.முகமது பாட்சா*
25/04/2018

No comments:

Post a Comment

Popular Posts