
டோன் மில்ட்டனைத்
தெரியுமா உங்களுக்கு?
தெரியாதென்றால்
அவரை எனக்கு
நன்றாகவே தெரியும்...
அவரது
பூனைகளின் கூடுகளுக்குள்
நானும்
நுழைந்து வந்திருக்கிறேன்,
கேவின் ஜோஸ்வாவை
உங்களுக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை,
அமெரிக்கன் டைம்ஸில்
அவரது கவிதை மொழிகள்
அத்துணைப் பிரசித்தம்
கிமிக்கோ ஷிகியின்
ஜப்பனீஸ் கதைகளில்
என் கவிதைகளும்
கடந்து போகின்றன...
இவர்களைப்
படிக்காத கவிதைகள்தான்
ஷெல்லியையும்,
ஜான் கீட்ஸையும் மட்டுமே
தூக்கிப் பிடித்து திரிகின்றன,
அவை நீயுட்டனின்
மூன்றாம் விதிகளுக்குள்
முக்காடிட்டும்
பதுங்கிக் கொள்கின்றன,
இணையத்தில் தேடிப் பாருங்கள்:
நிச்சயம் இவர்கள் யாரும்
உங்களுக்கு
அகப்படவே மாட்டார்கள்,
நானும் ஒரு பந்தாவிற்காகத்தான்
இந்தக் கவிதையில்
இவர்களைப் பிரசவித்திருக்கிறேன்!
இனியாவது
தமிழ்க் கவிஞர்களையும்
தமிழ் அறிஞர்களையும்
தூக்கி பிடிக்கப் பாருங்கள் !
.
- மு.முகமது பாட்சா*
21/04/2017
No comments:
Post a Comment