
கோப்பையை நிரப்பியவன்
குளுமை கட்டிகளைப் போட்டான்
எரிச்சலுக்கு
இதமாக இருக்குமென்பது அவனது வாதம்
சிறிது மிடறியவன்
உதட்டை துடைத்துக் கொண்டான்
நீ யாரென்று அவன் கண்கள் பேசின...
என் மௌனம்
அவனை ஒன்றும் செய்யவில்லை
கோப்பையை உடைத்து
கைகளை கீறிக் கொண்டான்
இரத்தம் வழிந்தது
பயப்படாதே சாகமாட்டேன் என்றான்
இறந்துவிட்டால்
சமாதி யாருக்காகக் காத்திருக்கும் ?
சப்தமிட்டு என்னைத் திட்டினான்...
நீ புத்தன் நான் போகி
நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய்
ஓங்கி அறைந்தான்
சுமையாவை கொன்றதும் நீதான்
பழித்தவன் காறி உமிழ்ந்தான்
இரத்தம் சட்டையில் தெறித்துச் சிதறியது
அவன் இறந்துவிட்டதாக
எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்
நான் அங்குதான் நின்று கொண்டிருந்தேன்
அவன் உறங்கிக் கொண்டிருந்தான்.
- மு.முகமது பாட்சா*
13/04/2018
No comments:
Post a Comment