Monday, 30 April 2018

வருகையின் பக்கங்கள்

Image result for bad king emotion people - painting

சூட்சமம் பெருஞ் சூழ்வெளி 
சுடரற்றக் காற்று பெரும் வனத்தீ 
நிராகரிக்கப்பட்ட வானத்தில் 
சிறகுகள் எரிகின்றன 
வார்த்தைகளை 
விற்பனைச் செய்கிறான் நாடோடி 
மாமிசம் 
மனிதனைச் சாப்பிடுகிறது 
கற்பிதத்தின் சக்தி 
கந்தகப் பெரும் மூளையாய் விரிய 
கற்பனையின் ஆட்சிக் கட்டில் 
அதிகாரம் மேவுகிறது... 
விழாக்குழுவில் 
வேடிக்கை பார்த்தவன் வேந்தனாகிறான் 
மூன்று தலை 
பன்னிரண்டு கரங்கள் முளைக்கின்றன 
கடாட்சத்தின் பல நூறு தலைகள் 
காலடியில் கிடக்க... 
ஆதாமின் எலும்பில் 
எழுந்த ஆயுத வார்த்தையொன்று 
பூமிக்குள் பெரு மூச்சு விடுகிறது 
சர்ப்பமொன்று மெல்ல நகர்ந்து போவது 
மீண்டும் சாத்தானின் 
வருகைக்காகக் கூட இருக்கலாம் 
எதற்கும் கேள்விக் குறிகளை 
பதுக்கிக் கொள்ளுங்கள் 
அதுவே உங்களுக்கு ஆயுதமாகவும் இருக்கும்.

- மு.முகமது பாட்சா*
30 /04 /2018 

No comments:

Post a Comment

Popular Posts