Sunday, 8 April 2018

கபர்ஸ்தானின் கதவுகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

கபர்ஸ்தானின் கதவுகளை மூடுவதில்லை
அங்கு எப்போதும் 
ஊதுபத்தின் வாசம் அடித்துக் கொண்டேயிருக்கிறது
தினம் யாராவது ஒருவருக்கு
துவா ஓதிக் கொண்டேயிருக்கிறார்கள்
நித்தியக்கல்யாணியின் பூக்களை
அங்குறங்கும் கனவுகள் அழகுறச் செய்கின்றன
சந்தூக்கு சுமந்த பூக்கள் சமாதியில் 
உதிரும் போதுதான் அழகாக இருக்கின்றது
கவிஞன் காட்டிய நிலாவிற்கும்
கபர்ஸ்தான் காட்டும் நிலவிற்கும் ஆயிரம் வித்தியாசங்கள்
கண்ணீர்த்துளிகளைக் கலக்காமல் - மண் 
குழிகளை மூடுவதேயில்லை
குழி வெட்டுபவனின் வீட்டில் 
தினம் மைத்தானவன் சிரித்துக் கொண்டேயிருக்கிறான்
துவாக்களோடு சேர்ந்து
கலிமாவும் யாஸினும் மணத்துக் கொண்டேயிருக்கிறது
நரகம் சுவர்க்கம் 
இரண்டுமே ஒரே இடத்தில்தான் உறங்குகின்றன
மறுமை நாளின் மகஷரின் வெப்பச்சூட்டு பயணம்
இங்கிருந்தே தொடங்கி விடுகிறது...
ஆணவங்களும் அன்பும் 
ஆசைகளோடு ஒரு சேர புதைந்து கிடக்கும் 
கபர்ஸ்தானின் கதவுகள் என்றும் திறந்தே கிடக்கும்
மரணம்தான் அதன் மகத்தான வாசனை.

- மு.முகமது பாட்சா*

08/04/2018






No comments:

Post a Comment

Popular Posts