
நம்புங்கள் நான் சுதந்திரமானவன்
ஆனாலும் நானொரு சிறைவாசி
என் கைகளில் துப்பாக்கியிருக்கிறது
பிஸ்டலின் முனை
எப்போதும் என்னைப் பார்த்தபடி
என் வார்த்தைகளின் மொழிபெயர்ப்பு
என்னைத் தீவிரவாதியென்று சொல்கிறது
நம்புங்கள் நான் சுதந்திரமானவன்
ஆனாலும் நானொரு சிறைவாசி
என் தேசத்தின் மலர்களில்
தினந்தோறும் கேள்விகள் பூக்கின்றன...
பதில்கள் மட்டும் உலர்ந்தேதான் கிடக்கிறது
விழிகளைக் கழற்றி வைத்து விட்டுத்தான்
இங்கு இதிகாசங்களையே படிக்கிறேன்...
என் நாக்கில் சொருகப்பட்டிருக்கும் அம்பு
நிச்சயம் பிரார்த்தனைக்கானதல்ல
என் காதுகளை
களிமண் சுவர்களால் மறைத்துக் கொள்கிறேன்
வண்டுகள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக
நம்புங்கள் நான் சுதந்திரமானவன்
ஆனாலும் நானொரு சிறைவாசி
இருட்டைத்தான்
வெளிச்சமென்று எனக்கு போதிக்கப் பட்டிருக்கிறது...
இருட்டில் வாழ
எனக்கு எப்போதும் பிடிப்பதேயில்லை...
என் கால் சக்கரங்களின் இயக்கியைத் தேடாதீர்கள்
ஐந்து வருடத்திற்கொருமுறை
யாரிடமாவது கொடுத்து விடுகிறேன்
என் சிரிப்பிற்கான இயக்கம் என்றும்
முகமூடிகளுக்கு மட்டுமே சொந்தமானது...
நம்புங்கள் நான் சுதந்திரமானவன்
ஆனாலும் நானொரு சிறைவாசி
- மு.முகமது பாட்சா*
16/04/2018
No comments:
Post a Comment