
கட்டிப் போடுகின்ற கனவுகளின்
கட்டை அவிழ்த்துவிட்டு
கனவுலகிற்குள் நுழைகின்றேன்,
நிஜ உலகின் பரிமாணங்களோடு
கனவுலகமும் கட்டற்ற மாயைகளோடு
என்னை வரவேற்கின்றது,
நல்ல கனவுகளோடு கெட்டக் கனவுகளும்
ஒன்றாகத் தான் சுற்றித் திரிகின்றன...
கனவுலகின் யுவன் யுவதிகளெல்லோரும்
காமத்துடன்
கட்டில்களைக் கட்டிப் பிடித்துக் கிடக்கிறார்கள்
பகல் கனவுகளுக்கென்றே
ஓர் இடம் தனியாக அங்கிருக்கின்றது...
ஆசைகளை
அளவில்லாமல் அடுக்கி வைத்திருந்தார்கள்...
தங்கமும் வெள்ளியும் குவிக்கப்பட்டவிடத்தில்
நுழைவதற்கே அனுமதி மறுக்கப்பட்டது...
அஃது
அரசியல் வாதிகளுக்கு மட்டுமே
சொந்தமானதாம் !
கனவுலகை விட்டு வெளியே வந்த பிறகுதான்
தெரிந்து கொண்டேன்
நிஜ உலகமும் கனவுலகின்
கறுப்பு வெள்ளைப் பிரதித் தானென்று!
- மு.முகமது பாட்சா*
07/04/2017
No comments:
Post a Comment