
அந்தப் பள்ளிவாசலின்
வெள்ளிக்கிழமைகளுக்கு
மிகவும் பரிச்சியமானவர்,
தும்பைப்பூ உடையில்
உட்கார்ந்து...
தொழுகைக்குப் பிறகு
யாசித்துக் கொண்டிருப்பார்,
கால்களில் அவருக்கு
எண்ணிக்கை குறைந்தது
கருணையைக் கூட்டியது,
திக்ருக்களின் தூரத்தில்
மரணத்தைக் கூட
கேட்டுக் கொண்டிருக்கலாம்,
விரித்த துண்டில் விழுவது
காசுகள் மட்டுமல்ல
சில பாவங்களும் என்பது
நன்றாகவே தெரியும்,
அதானலென்ன?
கண்ணில்லாத மனைவிக்கும்
தனக்கும்
இந்தப் பாவங்கள்தானே
சில நியாயங்களைச் செய்கிறது...
அத்தாவையிழந்த
அடுத்தவீட்டு சபரினாவுக்கும்
ஆசையாய்
ஒரு பிரியாணி பொட்டலம்
இந்தக் காசிலிருந்துதான் போகும் !
மு.முகமதுபாட்சா*
17/03/2017
No comments:
Post a Comment