
மௌனமாகச் சில வார்த்தைகள்
ஊர்வலம் செல்கின்றன
தொண்டைக் குழியில் உட்கார்ந்திருந்த
சில வார்த்தைகள்
எச்சிற்குமிழோடு வந்து விழுகிறது...
ஏராளமான வார்த்தைகள்
ஆயுதங்களை பிடித்துக் கொண்டே திரிகின்றன
சாந்தி பேசும் வார்த்தைகளின் கீழ்
இரத்தமே முற்றுப் புள்ளியாக நிற்கிறது
மொழியறியா காகம்
ஒற்றை விளிப்பில் உறவுகளை அழைப்பது எப்படி?
நாய்களின் வால் பேசும் மொழி
என்னவாக இருக்கும்?
ஓவியங்கள் மட்டுமே
மொழிகளை உதறிவிட்டுப் பேசுகின்றன
நீ - நான் என்பதே பிரிவினையாகிறது
வார்த்தைகளில்லாத
கவிதையை படித்துக் கொண்டிருக்கும் என்னிடம்
மொழிகளைப் பற்றி கேட்டால்
என்ன சொல்லிவிடப் போகிறேன்...
வெள்ளைத்தாளை முறைத்துக் கொண்டிருந்து
அமைதி தவழ்ந்தால்
அதுவும் கூட ஒரு நல்ல கவிதைதான்.
- மு.முகமது பாட்சா*
09/03/2018
No comments:
Post a Comment