
ஒரு சொல்தான்
பிறிதொரு சொல்லையும் பிரசவிக்கிறது,
எழுத்துக்களின் கூட்டணி அமையாமல்
வார்த்தைகள் அமைவதில்லை,
முகம் திருப்பி நிற்கும் எழுத்துகள்
முற்றுப் புள்ளிக்கும் கூட ஆகாது,
காற்றைச் சுமந்து வரும் எழுத்துகள்
பாடல்களாக ஒலிக்கின்றன
தலையாட்டும் சங்கீதம்
எழுத்துகளை இசையாகவே கோர்க்கிறது,
வலசைச் செல்லும் பறவைகளும்
எழுத்துகளின் கூட்டமாகவே பறக்கின்றன,
வசை மொழிவதற்கும் கூட
சில சொற்கள் தேவைப்படுகிறது தோழா,
என் மொழியின் ஆட்டுக்குட்டி
என்னைத் தினமும் மேய்கிறது
நான் துளிர்த்துக் கொண்டேயிருக்கிறேன்,
கடலின் ஆரவாரத்தில்
எத்துணை சொற்கூட்டங்கள் ஒளிந்திருக்கும்,
தனியாரிடம் தாரை வார்க்கப் படாதது
எழுத்துகள் மட்டும்தான்,
'என் உரிமை' என்பது என் ஐந்து விரல்கள்,
'என் கோபம்' என்பது பஞ்சபூதங்கள்
மௌனம் என்பதைப் புதைத்து விடுங்கள்
அஃது என்றுமே ஆபத்தானது,
எழுத்துகளுக்கு வீரியம் இருந்தால்தான்
நம் கைகளுக்கும் கூட உரம் ஏறும்,
வா தோழா கை கோர்ப்போம்
எழுத்துகளோடும் சொற்களோடும்.
- மு.முகமது பாட்சா*
15 /03 /2018
No comments:
Post a Comment