
மாயா பிம்பங்களின் மகரந்த வாச
மனோகர நளினத்தின் நிழல் பிடித்து
நடன் களி யாடுகிறான்
விழிகளின் நயனச் செவ்வியலில்
வில்லேந்தி வீழ்த்துகிறாள் திரை நாயகி
காமக் கடூரன் அரிதாரம் வியர்க்க
கதை நகர்த்தும் திரைக்குப் பின்னால்
உழைப்புகளின் கிரீடம்
மறைந்து உட்கார்ந்திருக்க
ராஜபாட்டின் கூத்து கிரீடன்
பெருங் கூத்தனின் தலையில்
ஏதேன் தோட்டத்து நாகமாய் உட்கார்ந்து
கைதட்டல்களும்
விசில் சப்தங்களும் ஆட்சிக் கட்டிலின்
அரியணைப் பேரிகையென
மனச் சாத்தானாய் மந்திரம் ஓதுகிறது
நடனின் காலடியில் கர்வம் பூக்க
நிழல் நிஜமாகவும்
நிஜம் நிழலாகவும் மாறும் வேளையில்
முடை நாற்றம் வீச
சாத்தானின் கைகள் மெல்ல உயர்கின்றன.
- மு.முகமது பாட்சா*
06 /03 /2018
No comments:
Post a Comment