
நெருடாவின் கவிதைகளைப் பற்றி
பேசிக் கொண்டிருந்தோம்...
வாலியும் கண்ணதாசனும் வந்து
சேர்ந்து கொண்டார்கள்,
அப்போதுதான் வந்த அப்துல் ரகுமான்
தமிழன்பன் கவிதைகளைச் சிலாகித்தார்,
கவிதைகள் கடலாகப் பெருகி ,
எங்களை மூழ்கடித்துக் கொண்டிருந்தது,
கவிதைகளையே படகுகளாக்கி
துடுப்புக் கவிதைகளால்
படகுகளைச் செலுத்தி கரைகளைத் தேடினோம்,
சூறாவளிக் கவிதைகள்
எங்களைச் சூழ்ந்து அலைக்கழித்தன,
சூஃபியின் கவிதைகளுக்குள்ளும்
ஜென்களின் கவிதைகளுக்குள்ளும் நுழைந்து
தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறோம்
எங்கிருந்தோ பறந்து வந்த சருகுகள்
தத்துவக் கவிதைகளைப் பாய்ச்சலாக்கி
சூறாவளி காற்றினை விரட்டியடிக்கிறது...
கவிதை கரை தட்டிய இடத்திலிறங்கி
உற்சாகமாக நடக்கிறோம்,
அங்குதான்
ஊழல் கவிதைகளில் சிக்கிக் கொண்ட
அரசியல் கவிதைகளை மீட்பதற்காக
புரட்சி கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தார்கள்
காந்தியும், காரல் மார்க்சும் !
- மு.முகமதுபாட்சா
03/03/2017
No comments:
Post a Comment