
அத்திவாரமில்லாத
கட்டிடத்தின் மீது உட்கார்ந்து கொண்டு
'நான்தான் உயரம்' என்கிறாய்
காட்டெருக்கம் வேர்கள்
கட்டிடத்தின் காலை தூர்க்கிறது.
ஒரு சொல்லை நட்டு
ஓராயிரம் சொற்களைப் பறிக்கிறாய்
கஞ்சாசெடிகளென படர்ந்திருக்கிறது
சொற் கூட்டம்.
நீ தீட்டும் அறுவாளின் முனையில்
உன் பெயரேக் கூட எழுதியிருக்கும்.
உதிராத ஒரு சொட்டு கண்ணீரும்
அந்தகாரத்தின் அதிகார ருசி.
இரவில் தோண்டிய பள்ளத்தில்
எத்தினை நட்சத்திரங்களை
உன்னால் புதைக்க முடியும்?
ஓடாத நதியென்று
உட்கார்ந்திருக்காதே பெருமழை
அதன் பாதைகளை கட்டமைக்கும்.
மமதை ஒரு மண்கிரீடம்.
மாயனின் கைகளுக்கு
சாட்டைக் கயிறே போதும்.
மகிழம் பூவிற்கு கூட
மக்கிப்போனால் வாசமுண்டு.
நாற்றப் பிணம் நீ நாளை எனதென்கிறாய்..
நீயே இவ்வளவு யோசிக்கும் போது
இயற்கை என்ன படுத்தா உறங்கும்?
- மு.முகமது பாட்சா*
02 /03 /2018
No comments:
Post a Comment