
.
உனக்கும் எனக்குமான ஞாயிறு...
என் ஞாயிறு சோம்பல் நிரம்பியது.
அது வெகுநேரம் புரண்டுவிட்டுத்தான்
கட்டிலை விடுவிக்கிறது.
பின்னர் நாளிதழ் புரட்டுகிறது
தொலைகாட்சிச் சேனல்களை மாற்றி மாற்றி
ஆர்வமின்றிச் செய்தி கொறிக்கிறது.
மணிகொரு தரம் தேநீர் அருந்துகிறது
நண்பர்களுடன் தொலைப்பேசியில் அரட்டையடிக்கிறது.
கைமீறிப் போகும் அரசியலுக்காக எரிச்சலில் கொஞ்சம் வசவும் தயாரிக்கிறது.
பிள்ளைகளிடமும் உன்னிடமும் அனாவசியமாய் அதிகாரம்செலுத்துகிறது.
யாதொன்றும் நிகழ்த்தாது அது வெற்றுப்படகாய்
என் அன்றைய நதியைக் கடந்துவிடுகிறது.
உன் ஞாயிறு அவ்வாறில்லை.
அதிகாலையிலேயே என் கைவிலக்கி அது எழுந்துகொள்கிறது.
வியர்த்துக்களைத்து அடுக்களையைப் புதுப்பிக்கிறது.
நாட்கள் போட்ட குப்பைகளையும் அழுக்கையும் துப்புரவு செய்கிறது.
மிக்ஸியிலும் கிரைண்டரிலும் கொஞ்சம் அரைபடுகிறது.
இட்டலிப் பானையிலும் குக்கரிலும் வேகிறது.
அடுகளையில் புழுங்கி சமையலில் மணக்கிறது.
அடம்பிடிக்கும் பிள்ளைகளைக் குளிக்கவைத்து உடைபூட்டி அமுதூட்டுகிறது.
சாப்பாட்டு மேசையில் கூட அது நிதானிப்பதில்லை.
கொட்டும் வெய்யிலில் அங்காடிக் கடைகளில் அது கொஞ்சம் ஏறி இறங்குகிறது.
பழவண்டி, காய்கறிக்காரனிடம் பேரம் பேசுகிறது.
லாண்டரி வண்டியிடமும் துணிகளைக் கொடுத்து வாங்குகிறது.
சக்கரப்பொழுதுகளுக்கு மத்தியில் கடவுளுக்கும் வஞ்சகம் பண்ணாமல்
விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்கிறது.
இடையிடையே என் காதலுக்கும் அது கொஞ்சம் கருணை காட்டுகிறது.
பிள்ளைகளின் வீட்டுப்பாடத்திலும் சற்றே கரைந்து
அவர்களின் புத்தகங்களை நேர்த்தி செய்கிறது.
வேலைகளின் நெரிசலிலும் அக்கம் பக்கம் சிநேகமாய்ப் புன்னகைக்கிறது
குடும்ப உறவுகளைப் பூக்கச்செய்யவும் அது தவறுவதில்லை.
குடும்ப பட்ஜெட் குழறுபடிகளையும் கூர்த்தமதிகொண்டு அது வகுக்கிறது.
அலுத்துவரும் இரவில் பிள்ளைகளின்
தலைகோதிக் கதைசொல்லி உறங்கச்செய்கிறது
மொத்தத்தில் உன்னைக் கரைந்து
எங்களை வண்ணமயமாய் வரைகிறது உன் ஞாயிறு.
இப்படியாய் இன்றைய பரிபாலனத்தை முடித்து
உலகக்களைப்போடு கட்டில் சாய்ந்து
அப்பழுக்கற்ற குழந்தையாய் உறங்கிப்போகும் உன் ஞாயிறை
ஆழ்ந்து ரசித்துக் கொஞ்சம் கவலையுறுகிறேன்
பின்னர் அதன் கைபற்றி நன்றியோடு முத்தமிடுகிறேன்.
கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்
No comments:
Post a Comment