
வாகனங்களின் இரைச்சலினூடே
நாடோடியின் கானமொன்று பயணிக்கிறது
புறாக்களின் பக்பக் இசை
பள்ளிவாசல்களின் கதவுகளை திறக்கின்றன
பக்தியின் இசையாய்
புலம்பல்கள் இரைந்து கிடக்க
உல்லாசத்தின் இசை
ஏழு வண்ணங்களாக நிறைந்து பரவுகின்றது
கடன் வாங்கியவன்
தட்தட் இசையுடனே எப்போதும் பயணிக்கிறான்
மௌனத்தின் இசை
விசும்பலாகவும் கூட இருக்கலாம்
அதிகாரத்தின் இசை
ஆடம்பர விடுதிகளில் குதித்தாடுகிறது
எவனோ ஒருவன் தாசியை மீட்டுகிறான்
முனங்கலிசை
அவள் வயிற்றின் பசியைப் போக்குகிறது
அழுகையின் இசையோடு ஒருவன் பயணிக்க
மங்கல இசையோடு
இருமனங்கள் ஒன்றாக இணைகின்றன
ஆர்ப்பாட்ட இசைகள்
அதிகாரவெடிகளாய் பட்டாசு கொளுத்துகிறது
அட்சயபாத்திரங்கள் வற்றிக் கிடக்க
ஏழைகளின் இசை எப்போதும் கண்ணீரோடுதான்.
- மு.முகமது பாட்சா*
01 /03 /2018
No comments:
Post a Comment