
இந்தக் கதையை
எப்படி எழுதலாமென்று யோசிக்கிறேன்
எத்தனைக் காலமாய்
ஒரு ஊரில் தொடங்குவது?
ஒரு ஊரில் தொடங்கும் கதைகளிலெல்லாம்
எப்படியும் ஒரு ராஜா வந்துவிடுகிறார்
மஹா கனம் கனம் ஶ்ரீ என்றெல்லாம் கூட
கதைகள் தொடங்க வாசித்திருக்கிறேன்
சூழலை வர்ணித்துத் தொடங்கும் கதைகளை வாசித்தால்
சிரிப்புதான் வருகிறது...
சூழல் கெட்டு எத்துணை காலமாயிற்று?
மொத்தத்தில் ஏழெட்டு கருக்கள் மட்டுமே அடிக்கடி
கதைகளில் சூள் கொள்வதாக வழக்கு இருக்கிறது
நான் அவன் அவள் என்றே
அதிகக் கதைகள் தொடங்குவதாக நண்பன் சொல்கிறான்
தாசிக்கதைகள்
புராணகாலங்களிருந்தே தொடர்கிறது
புரட்சிக் கதைகள்
மார்க்ஸின் சிந்தனைக்கு பிறகே பொலிவடைந்தது
எழுதாத கதையென்று இங்கு எதுவுமேயில்லை
ஆனாலும் எழுத்தின் கர்வம்
சிலரின் தலைகளில் ஏன் ஏறிக் கொள்கிறது?
கதையெழுதுகிறவன்தான்
கடைசியில் அந்தக் கதைக்கே கடவுளாகிப் போகிறான்
அவன்தானே அந்தக் கதா பாத்திரங்களின் பிரம்மா!
ஒரு உலகைச் சமைக்க உட்கார்ந்திருக்கிறேன்
சாத்தான்
தன்னையும் சேர்த்துக் கொள்ள வரிசையில் நிற்கிறான்
ஒரு சருகு மெல்ல அசைந்து என்னைப் பார்க்கிறது
அதன் வருகைக்காகக் காத்திருக்கும் வேர்கள்
தங்களின் தலையை நீட்டி அந்தச் சருகைப் பார்க்கின்றன
கதை
தன் உலகைச் சமைக்க இப்போதே தொடங்குகிறது
என் தலையில் துளிர்விடும் அந்த சின்னச் செடி
இந்தப் பிரபஞ்சத்தின் முதல் விருட்சமாகும்...
சருகு முறியும் சப்தத்தோடு தொடங்கும் கதையில்
காகம் தன் தலையைச் சாய்த்து பார்க்கிறது.
- மு.முகமது பாட்சா*
13 /03 /2018
No comments:
Post a Comment