
உயிர்த்திசை
தொப்புள் கொடியின் வாசம்
ஒட்டிக்கொண்டிருக்கும் உதிரத்துளிகளின்
நரம்புகளில் பாலருந்தும் இதயம்
அம்மா என்றுதான் துடிக்கிறது,
திசையறியா பெருவெளியிலும்
தாயன்பின் கருணை ஒட்டிக் கொண்டிருக்கும்,
ஒற்றைப் புன்னகையில்
அகிலத்தின் விதைகள் துளிர்விடுகின்றன,
அழகிய பொய்களோடு அமுதூட்டும் கலை
அவளுக்கு மட்டுமே இங்குச் சாத்தியம்,
தாயன்பின் சுவாசம் சுவாசிக்காதவன்
சுகப் பிறவியேயல்ல
கருவறைக்குள் பக்தனை வைத்து
காவல் காக்கும் சாமியைப் பார்த்ததுண்டா?
இயற்கையின் படர் விருட்சம் விரிகிறது
தாய்மையின் நிழல் அருந்துகிறேன்,
பிள்ளைகளின் சுவாசத்தில்தான்
பெருமை பூசிக் கொள்கிறாள் அழகிய தாய்...
சுவனத்தின் தலை வாசல்
தன் கதவுகளை என்றுமே மூடுவதில்லை
புன்னகையின் அம்சம்தான் தாய்மை
அதைப் புதைமணலில் புதைத்து விடாதீர்கள்,
அந்த நிலவையே இரசித்துக் கொண்டிருக்கிறேன்
அவள் சொன்ன அழகான பொய்கள்கூட
இன்னமும் அங்குதான் ஒட்டியிருக்கின்றன.
-மு. முகமது பாட்சா*
17 /03 /2018
No comments:
Post a Comment