
குருவியொன்று
பனங்காயைச் சுமந்து கொண்டு போகிறது
எறும்புகள்
நதிகளைத் தூர் வாரிக் கொண்டிருந்தன
மரம்வெட்டிகளை மரங்கள் சாப்பிடுவதாக
கிளிகள் பேசிக் கொள்கின்றன
விவசாயிகள்
காலால் நிலத்தை உழுகிறார்கள்
இராக்கெட்டுகளை உருக்கி
கலப்பைகள் செய்து கொண்டிருந்தார்கள்
பண்டம் மாற்று வந்ததால்
பசிகள் இறந்து கிடக்கின்றன
சுவர்க்கம் யாருக்குச் சொந்தமென்று மதவாதிகள்
நிலாவில் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்
அரசியல்வாதிகள்
கனிமவளங்களை கொள்ளையடிக்க
செவ்வாய் கிரகத்திற்கு இடம் பெயர்ந்து விட்டார்கள்.
புங்க மரக்காற்றிலமர்ந்து
இந்தக் கவிதையை எழுதுகிறேன்
கனவாக இருந்தாலும் கலைத்து விடாதீர்கள்.
- மு.முகமது பாட்சா*
24/03/2018
No comments:
Post a Comment