Monday, 26 March 2018

இலக்கியத் திரட்டு

தானியங்கு மாற்று உரை இல்லை.

இலக்கியச் சுவை
----------------------------
(சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். 
இவன் சோழன் செங்கணான் என்ற மன்னனோடு போரிட்டு 
அவரால் பிடிக்கப்பட்டுச் சிறையில் அடைபட்டிருக்கையில் 
மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறை தன் தாகத்திற்குத் 
தண்ணீர் கொடுக்குமாறு காவலாளிகளிடம் கேட்க, காவலாளிகள் 
அம்மன்னன் மனம் புண்படும்படி இழிவுப்படுத்தி ஒரு மன்னன் 
என்று கூடப் பாராமல் மரியாதையின்றி நடந்து கொண்டார்கள். 
தாகத்துக்குத் தண்ணீர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் மன்னன் 
மிகவும் மனம் வருந்தி, தந்த நீரைக் குடிக்காமல் 
வடக்குத் திசை நோக்கி அமர்ந்து ஒரு செய்யுளை எழுதி விட்டு உயிர் நீத்தான்.) 

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் 
ஆள் அன்று என்று வாளில் தப்பார் 
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய 
கேள் அல் கேளிர் வேளாண் இடர்ப்படுத்துச் சிறுபதம் 
மதுகை இன்றி வயிற்றுத் தீ தணியத் 
தாம் இரந்து உண்ணும் அளவை 
ஈன்மரோ இவ் உலகத்தானே? 

****** 

புதுக்கவிதையில் 
--------------------------------- 
குழந்தையொன்று 
இறந்தே பிறந்தாலும் 
பிறந்தது பிண்டமெனவிருந்தாலும், 
ஆள் இவனென்றே 
அருமையின் பொருளறிந்து 
கூர் வாளால் மார்பினைக் கீறி 
புதைத்தோர் வீர மரபில் 
செருக்காய் பிறந்த மன்னன் , 
நானோ 
சிறு கீறலின்றிச் சிறைப்பட்ட 
சிறியோனானேன், 
மானமிழந்தே 
பெருந்தீ வயிற்றின் பிணித் தீர்க்க 
சிறுமதியால் தண்ணீர் கேட்டு 
காத்திருக்கும் கழிந்தவனுமானேன், 
காலம்தான் கடைவரையென்னை 
ச்சீயென்றே உமிழாதோ? 
மானம் பெரிதென்றால் 
மாள்வதும்தான் தகையன்றோ! 
ஞாலமே என்னை ஏற்றுக் கொள் 
மானம்வழுவாத நன்னன் இவனென்று ! 

- மு.முகமதுபாட்சா*
26/03/2017

No comments:

Post a Comment

Popular Posts