Friday, 2 March 2018

கதையில் ஏறிக்கொண்டவள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்

என் கதைக்குள் நுழைந்தவள் 
தன்னையும் கதாப்பாத்திரமாக்க கேட்டாள், 
முழுமை பெறும் நிலையில் 
வேறு கதாப்பாத்திரங்களுக்கு 
வேலையில்லை என்று சொன்னேன் 
கண்ணகி கதையில் 
மாதவி நுழைந்த பிறகுதான் 
அது காப்பியமாக ஆனதென்றாள், 
தன் காதல் மொழிகளால் 
கதையும்கூட இனி காவியமாகுமென்றாள், 
உனது வருகையால், 
கதையின் நாயகர்கள் 
காணாமல் போவார்களென்றேன், 
இந்தப் பயம்தான் 
கதைக்கே பெரிய பலம் என்றாள், 
நினைப்பது போல் நடந்துவிட்டால் 
அது கதையேயல்ல , 
கற்பனைகளின் வெறும் கூடுதானென்றாள் 
அவர்களையும் 
கேட்டு விட்டுச் சொல்வதாகச் சொன்னேன், 
அவள் சிரித்துவிட்டு, அப்படியென்றால் 
அவர்கள்தான் உன்னை எழுதுகிறார்களா? 
என்று திருப்பிக் கேட்டாள், 
வேறுவழியில்லாமல் அவளையும் 
என் கதைக்குள் நுழைத்துவிட்டேன், 
இப்போது என்னவோ அவள்தான் 
என்னையே எழுதிக் கொண்டிருக்கிறாள் !

- மு.முகமது பாட்சா*
03/03/2017

No comments:

Post a Comment

Popular Posts