
சுடரில்லா மௌன சூட்சம பெருவெளியில்
ஊளையிடும் ஓநாயின் ஒருங்கூட்டலில்
இரவு சற்று கிழிந்தே தொங்குகிறது
கடலின் மௌனம்
காற்றை பெரும் மூச்சாக்கி நகர்த்தும்
அலைகளின் சப்தக்கூடு
இடம் மாறி அலைகிறது நெஞ்சுக்குள்
நிலவு தன் முகத்தை விகாரமாக்கி
துப்புகிறது நட்சத்திர எரிக் கற்களை
எரிமலைக் குழம்புகளில் அரூபம் வரைகிறான்
காலச் சக்கரத்தான்
இரவுகளில் ஏன் ஆலயங்கள்
தம் கதவினை மூடிக் கொள்கின்றன
பிரார்த்தனைகள் இன்னமும்
வாசலில்தான் கால்வலிக்க நிற்கின்றது
ஓ! இந்த இரவின் மயானத்தில்தான்
எத்துணை பிணங்கள் நிம்மதியாக உறங்கும்?
இரவின் படிமத்தை அறியாதவன்
பகலில் ராசாவாக கூத்துக் கட்டி ஆடுகிறான்...
விழித்திருக்கும் இரவிற்கு மட்டுமே தெரியும்
பகலென்பது பெரும் வேசமென்று
நான் என் நிழலைக் கழுவுகிறேன்
பகல் என்னையே முறைத்துப் பார்க்கிறது.
- மு.முகமது பாட்சா*
10/03/2018
No comments:
Post a Comment