வாழ்வின் மீது வெறுப்புற்ற அந்தக் கலைஞன் முதலில்
தன் ஆர்மோனியத்தை தூக்கி கடலில் எறிகிறான்.
தான் இசையமைத்த பாடல் துணுக்குகள்
ஒவ்வொன்றாகப் பிரிக்கிறான்
பல்லவி அனுபல்லவி சரணங்களை ஊதி
உச்சி மலையில் போய் உட்கார வைக்கிறான்
புல்லாங்குழலை மூங்கிலில் மாட்டுகிறான்
தபேலாவை இறந்த மாட்டை எழுப்பி அதன்
முதுகில் பூட்டுகிறான்.
வீணை நரம்பறுத்து தகட்டின் தாயைத் தேடி
ஒப்புவிக்கிறான்.
களி மண்ணில் புதைக்கிறான் கடத்தை.
கருவிகள் ஒவ்வொன்றையும் அதன்
பிறப்பிடம் விட்டு விட்டு குரல்களோடு நிற்கிறான்
ஆண் குரலை கடல் அலையிலும்
பெண் குரலை பள்ளத்தாக்கிலும் விட்டு விட்டு சுற்றிப் பார்க்கிறான்..
மிச்சம் இருந்தவை சுரங்கள் மட்டுமே
அவற்றை எடுத்து கடைசி முத்தம் தந்து விட்டு
காற்றிடம் கையளிக்கிறான்.
வர்ணங்களை வானவில்லிடமும
்சங்கதிகளை ஜதி சொல்லிய நதியிடம்
விட்டு விட்டு ஏகாந்தியாய் நடக்கிறான்.
ஒலிகளற்ற உலகு நோக்கி
இப்போது ஏதுமற்றவனாயிருக்கிறான்
எனவே..எல்லாமானவனாய் இிருக்கிறான்
பிரபஞ்சத்தின் ஆதி இசையின் ஒரு துளியாய் அவன் நடக்கிறான்.
இப்போது அவனுடன் இருப்பது
கொஞ்சம் கடவுளும் கொஞ்சம் மரணமும்.
மரணத்தை அவன் இயக்கிய இசை வெல்லும்
கொஞ்சம் கடவுளோடு சேர்ந்து அவன் பாடும்
பாடலை மெட்டமைக்க..அதோ வருகிறான்
இன்னொரு இளம் கலைஞன்
கவிஞர் ஜெயதேவன்
No comments:
Post a Comment