Thursday, 8 March 2018

தொலைத்த கதை

தானியங்கு மாற்று உரை இல்லை.


தொலைத்த கதையொன்று இருக்கிறது, 
அதில் நானுமொரு கதாப்பாத்திரம். 
வழுக்கி விழுந்த வார்த்தைகளுக்குள் 
வாழ்ந்தவள்தான் கதாநாயகி, 
காதல் மொழிகளால் நிரப்பப்பட்ட கதையது, 
அச்சமும், பயமும் மட்டுமே 
வில்லனாய் விஸ்வரூபமெடுத்த கதையில், 
சாதிகளும், மதங்களும் மட்டும் செத்து கிடந்தன, 
புத்தகங்களும் பறவைகளாக மாறி 
காதல் மொழிகளைச் சுமந்து திரிந்தன, 
கவிதைகளுக்குள் நுழைந்து 
கடலில் நீந்துவது சுலபமாகவிருந்தது, 
பட்டாம் பூச்சிகளின் வண்ணங்களைப் பூசிக்கொண்டு 
ஆள்மாறாட்டம் செய்ததும், 
நீரில் மிதந்த நிலவில் 
முகம் பார்த்த நிகழ்வும் இதிலடக்கம், 
கண்ணாடி சட்டகங்களுக்குள் 
கனவுகளை மறைத்து வைத்த கதையை 
முடிவிற்குக் கொண்டுவந்தது 
ஆளுக்கொரு தனித்த கல்யாண பத்திரிக்கை! 
காரணங்கள் வெட்கப்பட்டோடின, 
புன்னகைகள் வலுவிழந்து 
கைக் குலுக்கலின் அந்த ஒற்றை முத்தத்தில் 
முடிந்து போனது ஒரு காதல் கதை ! 

ஆனால் இன்னமும்
தொலைத்த கதையொன்று இருக்கிறது, 
என்னைப் போலவே அவளிடமும்! 

- மு.முகமதுபாட்சா*
09/03/2018

No comments:

Post a Comment

Popular Posts