Sunday, 4 March 2018

வெள்ளைத்தாள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

எழுதாத வெள்ளைத் தாளின் மீது
சில எழுத்துகளைத் தூவி
அதனுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்
பசியாறாத காகமொன்று
எழுத்துகளை 
இரையெடுக்க உட்கார்ந்திருக்கிறது
குளம் என்ற வார்த்தையில்
நீந்திக் கொண்டிருந்த கொக்கு
மீன் என்று எழுதாததற்காக
என்னை திட்டிக் கொண்டிருந்தது
சாதுரியமாக 
தாமரை என்ற வார்த்தையை
தவிர்த்து விட்டேன்
அல்லி மலர்கள் பூத்து சிரிக்கின்றன...
காதல் என்ற வார்த்தை மலர்ந்தவுடன்
நிலா என்ற சிற்பம்
மெல்ல நகர்ந்து வருகிறது
நீ என்ற வார்த்தை குறிலாகி
நிழல் என்ற வார்த்தை நீண்டபோது
நான் என்ற வார்த்தைகள் 
காணாமல் போயின...
கனவு என்றச் சொல்லை
வீசியெறிந்துவிட்டு
விடியல் என்று எழுதுகிறேன்
இப்போது எழுத்துகளையிழந்த
அந்த வெள்ளைத் தாள்
என் எதிரில் அப்படியே இருந்தது.

- மு.முகமது பாட்சா*
05 /03 /2018

No comments:

Post a Comment

Popular Posts