
தண்ணீரின் கதை
தரையிலிருந்தும் தொடங்கலாம்
மலையிலிருந்தும் தொடங்கலாம்...
காற்றின் பங்கு இல்லாமல்
மேகங்கள் உயர்வதில்லை...
சூரியனல்லவா
கடலை விழுங்கி
மேகத்தில் துப்பவேண்டும்...
நவீனம் துப்பிய எச்சிலில்
நதிகள் சாக்கடைகளாக ஓடுகின்றன
ஆலைகளின் புகை
அமிலங்களையல்லவா
மழையில் கொண்டு சேர்க்கிறது...
பூமித் தாயின் உடலில்
துளைகளைப் போட்டு புணர்ந்துவிட்டு
யோனியில் குழந்தையெடுப்பது
எப்படி சாத்தியம்?
அள்ளிக் குடித்த நீரை
வாங்கிக் குடிக்கும் வகைமைக்கு
நாகரீகம் என்று பெயரா?
தண்ணீர் நாள் என்பது
பன்னாட்டு நரிகளின் ராசத் தந்திரம்.
தாயை விற்று சேயை வாங்குவதும்
நிலத்தை விற்று நீரை வாங்குவதும்
எத்துணை முட்டாள்தனம்!
உரிமைகளை இனியும்
விட்டுக் கொடுக்காதீர்கள்....
நாளைக்கு உடையவர்கள்
நம்மைத்தான் கேள்விகள் கேட்பார்கள்.
நா வறளும் நதிகளை
இனியாவது நாம் மீட்டெடுப்போம்.
- மு.முகமது பாட்சா*
22/03/2018
No comments:
Post a Comment