Tuesday, 13 March 2018

காலி கோப்பை

தானியங்கு மாற்று உரை இல்லை.

மிளகுக் கொடியில் நம் வாசம் வீசுகிறது
நிலவின் புன்னகை 
எதற்கென்றே தெரியாமல் நடந்து போகிறேன்
பறவைகளால் மட்டுமே 
எளிதில் இடம் பெயர முடிகிறது
உறவுகளின் சங்கிலியில் 
விரிசல்கள் இருந்தும் அவை அறுவதில்லை
எனக்கான ஒரு பாடலை 
நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்
தேசாந்திரியொருவன் 
அதையே பாடலாக பாடிக்கொண்டு செல்கிறான்
விடியலும் இரவும் மாறி மாறி அலுத்துப் போகின்றன
பறவைகளின் மரணம்
யாருக்கும் சுமைகளைத் தருவதில்லை
சருகுகள் கூட
பாரங்கள் சுமக்காமல் லேசாக உதிர்கின்றன
மரம் அஞ்சலி செய்கிறது
உதிர்த்தப் பூக்களை யாரும் கூட்டி தள்ளாதீர்கள்
இணைப்புகள் இருக்கும் வரைதான்
எல்லோரும் எல்லோரிடமும் பேசிக் கொள்கிறார்கள்
தொடர்பிழந்த செயலிகள்
மக்காத குப்பைகளாகவே மதிப்பிழந்து கிடக்கின்றன
தேநீர் கோப்பை காலியானதும்
என் சிந்தனைகளும் காலியாகி விடுகிறது
கோப்பையைக் கழுவி கவிழ்த்துகிறாள் மனைவி
நான் அப்படியே எழுந்து போகிறேன்.

- மு.முகமது பாட்சா*
14/03/2018 







No comments:

Post a Comment

Popular Posts