Saturday, 14 October 2017

நான் இரசித்த கவிதைகள் - 78

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

காணாமல் போனவர்கள் 
அவிழ்க்கப்படாத 
ஒரு மர்ம முடிச்சைப்போல 
காலத்தில் நிரந்தரமாய் வாழ்ந்துகொண்டே
இருக்கிறார்கள்

அப்பனின் முரட்டு அடியால்
பால்யத்தில் ஊரைவிட்டு ஓடி
ஏதோ ஒரு சந்தையில்
பலூன் விற்கும் மூத்த மகன்
ஜோபியில் வைத்திருந்த தன்
அம்மாவின் முகத்தையே இமைக்காது
பார்த்துக் கொண்டே இருக்கிறான்

கசப்பின் நெடி தாளாது
நடுநிசியில் வீட்டை விட்டு வெளியேறிய
ஒரு திருநங்கை கண்ணாடியில்
தன்னை பார்க்கும் போதெல்லாம்
ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம்
நடக்கிறது என நினைத்துக் 
கொள்கிறாள்

ஏதோ ஒரு பெரிய நகரத்தி்ற்கு 
அருகிலிருக்கும் வறியகிராமத்தின்
 காணாமல் போன குழந்தைகள் 
வன்புணர்வால் உடைக்கப்பட்ட எலும்புக்கூடுகளாய் 
பாதாள சாக்கடைகளின் அடியில்
கண்டெக்கப்பட்டார்கள்

போரில் காணாமல் போனவர்கள்
என்னதான் ஆனார்கள் என
கடவுளால்கூட கண்டறிய முடிவதில்லை

காணாமல் போன மனநலம் பாதித்தவர்கள் 
கிரானைட் முதலைகளின் தொந்தி ஏற
கொடிய நிசி இருளில்
நரபலிக்காக இரத்தம் குடிக்கப்பட்டனர்

காணாமல் போன என் தூரத்து
சொந்தகாரியை 
வேசியர் விடுதியிலிருந்து மீட்டு வந்த கதையை
சொல்லவில்லை என்றால்
இந்த கவிதை முழுமை பெறாது

காணாமல் போன விவசாயியான
என் ஒன்றுவிட்ட பெரியப்பா
மாநகரத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 
செக்யூரிட்டி உடையில்
திருடர்களின் கூரிய ஆயுதத்தால்
இரத்தம் தோய்ந்த உடலுடன்
இழுத்தபடியே கிடந்தார்

காணாமல் போவது என்பது
முழு விடுதலையா அல்லது
பறவையாகி திரிதலா அல்லது
பைத்தியம் தெளிதலா அல்லது
வசீகர கனவா ? என 
யாருக்குதான் தெரியும்

காணாமல் போனவர்கள் 
தங்கள் புகைப்படத்தில்
மர்மமாய் சிரிப்பது போலவே
எனக்கு மட்டும்தான் தோன்றுகிறது
அவர்களின் மர்ம நிழல்
நான் எங்கே போனாலும்
என் பின்னாலே வருகிறது
இன்னொரு நிழலாய்

குருவி சேர்ப்பது போல தங்கச்சி 
கண்ணாலத்திற்கு ஆத்தா சேர்த்த
கொஞ்ச சவரன் நகைகள்
குடிகார ஊர் சுற்றும் அப்பனால்
அடகு வைத்து முழ்கி போய்விட

நேற்று ராத்திரியிலிருந்து காணாமல்
போன ஆத்தாளையும் 
தங்கச்சி குட்டிம்மாவையும்
எங்கேங்கோ தேடி தேடி
கடைசியாய்
கொல்லைபக்கம் கிணற்றிலிருந்து 
கண்டெடுத்து 
நான் எழுப்பவே முடியாது
நடுவீட்டில் தலைமாட்டில்
வத்தி எரிய படுத்து கிடந்தார்கள்

என்னையும் தங்கச்சியையும்
ஆத்தா தலைக்கு ஊற்றி குளிப்பாட்டும்
அந்த கிணற்றடியில் இருந்துதான்
இக்கவிதையை எழுதி முடிக்கிறேன்

காணாமல் போனவனாய்......

 கவிஞர் அன்பில்பிரியன்

No comments:

Post a Comment

Popular Posts