
பட்டாம் பூச்சிகள் வானில் பறக்கின்றன...
காதலெல்லாம்
கல்லறைகளுக்குள் புதைந்துவிடுவதில்லை,
சூ யிங்டியின் கண்களில் வழியும்
தேவதையின் பார்வை
லியாங் ஷானோவிற்கு எப்படித் தெரியும்?
ஆணுடை தரித்தவளுக்குள்
அழகான இதயம் பூத்திருப்பதை
அவன்தான் எப்படி அறிவான்?
நண்பனாய் உரசியவனிடம்
தீயாய் பற்றிக் கொண்டவள்
சூ யிங்டி மட்டும்தான்,
விரல்கள் பிணைத்த நட்பின் அழுத்தம்
காதலின் அடித்தளமென்று
அவள் மட்டுமே அடிக்கடி உணர்ந்தாள்,
காதலை பிரிக்கக் கல்லூரியும் கூட
கடைசியாண்டை கட்டமைத்தது...
அழுகையின் உப்புக் கரைசலை உதட்டினில் தடவி
அழுந்த முத்தமிட்டாள்...
பிறகுதான் தெரிந்தது லியாங்கிற்கு
அந்த முத்தம் ஏன் இனித்ததென்று,
அவளுக்கான காதல் கொடியை அசைத்த போது
அவள் மாவோ வோடு நிச்சயமானாள்,
காதலை விதைத்தவள்
காதல் நோயால் அவனிறந்ததை எப்படி அறிவாள்?
சூறைக் காற்றொன்று சுற்றியடித்து
லியாங் ஷானோவின் பெயரை அவள்முன் வீசியடித்தது,
மா வோவின் கைகளை உதறியவள்
லியாங் ஷானோவின் மூச்சுக் காற்றைத் தேடினாள்
கல்லறையொன்று
அவளைக் கைக் காட்டியழைத்து
நான் தான் லியாங் ஷானோ என்றது,
சூ யிங்டி உப்பு முத்தமிட்டாள்...
கல்லறை கதவுகள் தானாகத் திறந்தன...
லியாங்கின் கைகள் அவளை வாரியிழுத்தது,
மாவோ வும் மற்றவர்களும் எட்டிப் பார்த்தார்கள்
தென்றல் காற்று மெல்ல எழுந்து நகர...
பூக்களின் நறுமணம் புது மழையாய்ப் பொழிந்தது....
காதலென்பது ஒன்றல்ல காதலர்களே
அஃது ஆயிரம் பட்டாம் பூச்சிகளென்று
அழகாய்ப் பறந்தன வானில்
சொல் காதலனே...
காதலென்பது
நீ நினைப்பது போல்
கழற்றி மாட்டும் சட்டை மட்டுமா?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment