
கந்தழி காணா வார்த்தை 'நான்'
காட்டின் மூலிகைவாசம்
நகரத்திற்குள் எட்டிப் பார்க்காது
உண்மையில் ஞானத்தின் நிரவல்
நிறைந்திருப்பதில்லை
வாய்களால் வாய்க்கால் நிறைந்து வழியாது
சொற்கள் விளைத்த பயிர்களை
அறுவடை செய்யும் மனசு அழுகின்றது
கடந்தவற்றில் ஒட்டியிருக்கின்றன
அறிவீனத்தின் படிம தட்டுகள்
ஆடுகள் அறியுமா
தழைகளுக்கும் உயிரிருப்பதை?
நானேன் இறகுகளை உதிர்க்க வேண்டும்
பறப்பதும் ஞானம்தான்
மூளைகளைக் கழற்றி வைத்துவிட்டு
மூலிகை காட்டில் தேடினால் கிடைக்காது
இல்லையென்பவனிடமும்
ஏதோவொன்று இருக்கத்தான் செய்யும்
வெறும் கையோடு யாரும் வரவில்லை
மூளையென்ற மந்திரம்
முழுசாய் நம்மிடம்தான் இருக்கிறது.
ஞானம் என்பதும் வெறும் வார்த்தைதான்
அறிவாய் அறிந்தவன்
கோட்டிக்காரனாகத் திரிகிறான்
- மு. முகமது பாட்சா*
No comments:
Post a Comment