Wednesday, 25 October 2017

நான் இரசித்த கவிதைகள் - 85


இரத்தக் கிடங்கு

 பெருங்கிடங்கினுள்ளே காத்திருந்தது
ரத்த நிறத்திலொரு நிழல்
ஆயிரமாயிரம்
தலைகளை கொண்டுபோகும்
இந்த நாட்களில்

கறுத்திருக்கும் வெயிலுக்குள்
கொப்பளிக்கிறது
இரத்தப் பெருக்கு.

 சாவின் புன்னகையைக் கண்டேன்

அழிவின் காலம்
தீர்க்கதரிசிகளைக் கசையலாடித்தபின்
வெளியே துரத்துகிறது

முள்முடிகளின் அலங்காரம்
இதோ
இதோ

 நெருங்கிவரும் அபாயத்தின்
கரு நிழலுள்
விருந்துக்காகச் செல்லும்
வீரர்களை விலகினேன்

 பனை மரங்களுக்குக் கீழே
செத்துக்கிடந்தன
நாறிய பிணங்கள் நூறுக்கு மேல்
யாருடையவை
யாரறிவார்
தெரிந்த முகங்களை எப்படிவிலக்குவது

 ‘பொன்னாய் மின்னிய மண்ணில்
பூவாய் உதிர்ந்து போகிறது
துளிராயிருந்த உயிரெல்லாம்’
என்றொருத்தி பாடுகிறாள்

 புரக்கேறிவரும் அவளுடைய பாட்டில்
தீராத சாபத்தையும்
வசையையும்
ஆற்ற முடியாக் கோவத்தையும்
இறக்கினாள்

இரத்தப் பெருக்காக.

கருணாகரன்

No comments:

Post a Comment

Popular Posts