Monday, 2 October 2017

தீண்டாதே

தானியங்கு மாற்று உரை இல்லை.

எதனை மறைத்துவிட்டு நடக்கிறீர்கள்? 
அழுக்குகள்தானே 
இங்கு அரிதாரம் பூசி ஒளிர்கின்றன, 
ஆதாமின் கண்களில் வழிந்த இரத்தம் 
ஆப்பிள்களுக்கு நிறம் கூட்டியதை அறிந்தீர்களா? 
வார்த்தைகளின் சுகந்தத்தை 
வஞ்சத்தின் கோரைப் பற்கள் எப்படி அறியும்? 
மௌனத்தை எரித்துத் தேநீர் அருந்துகிறீர்கள்.... 
சிறகுகளை 
பிடுங்கிவிட்டு பறக்கச் சொல்கிறீர்கள்.. 
வால்களால் பறக்க முயற்சிக்கிறோம், 
வானம் எங்களுக்கானதில்லையென்று 
அர்த்த சாத்திரம் எழுதியவன் சாணக்கியனா? 
அதைவிடப் பிச்சையெடுத்து வாழலாம் , 
பயம் விதைத்துப் பரவசம் கண்டீர்கள், 
பயம் விதைத்துப் பரவசம் காண்கிறீர்கள்... 
இனியும் நாங்கள் தூங்கத்தான் வேண்டுமா? 
வஞ்சத்தை இனிதான் யுக்தியாய் வீசுவோம், 
அதுவும் நீங்கள் கற்றுக் கொடுத்த வழிதான். 
வசமாக வந்து மாட்டிக் கொள்ளுங்கள்... 
வேறுவழியேயில்லை 
உங்களுக்கான ராஜ்ஜியம் வீழ்ந்து கொண்டிருக்கிறது, 
நீங்கள் தந்த முகமூடிகளைக் கழற்றி விட்டோம், 
கண்ணீர்த் துளிகள் காய்ந்து விட்டன, 
எங்களுக்கான உத்திரவுகளை இடுவதற்கு... 
நீங்கள் யாரென்று சொல்லிவிட்டுப் போங்கள் 
நீங்கள் யார்? 
அர்த்தமற்றவர்களுக்காகவே அர்த்த சாத்திரத்தை 
எழுதத் துவங்கிவிட்டோம்... 
தொடரும் அத்தியாயம்  எங்கள் கைகளில். 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts