
முகத்துவாரத்தின் வாயிலில்
முகாமிட்டிருக்கிறது ஓட்டைப் படகு
கழிமுகத்தின் ஆறு
கண்டு கொள்ளவேயில்லை....
கடலணைத்து முத்தம் கொள்ள
அலைகள்
வெண் நுரைத்துப் பொங்குகின்றன,
சங்கமமென்பது ஒரு வேகம்
நள்ளிகளை அலவன்கள் விரட்டி விளையாட
கை கோர்த்தவன் இதழ் கோர்த்திட
நெசவு நெய்கிறான்
நூல்கள் பின்னி பிணைகின்றன
சங்கமமென்பது ஒரு வேகம் ,
காகத்தின் தனிமையொன்று
ஓட்டைப் படகில் உட்கார்ந்திருக்கிறது,
அலைகளன் காற்று வேகமெடுக்க
பறப்பது சற்றுக் கடினம்தான்,
கண்களால் படகோட்டி....
செம்படத்தி காத்திருக்கிறாள்
இரவின் மீன் விருந்திற்காக,
கூடை இன்னமும் காலியாகத்தானிருக்கிறது,
சங்கமமென்பது ஒரு வேகம்.
எத்தனை பாதச் சுவடுகளை
இந்தக் கடல் தாங்கி நகர்ந்திருக்கும்?
கடலொரு மாயக் கிடங்கு ,
கரையொதுங்கா காதலர் பிணங்களை
காவலர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்,
கழுகுகள் இன்னமும் இனம் காட்டவில்லை..
காட்சியின் பிழையாய் ஓட்டைப் படகு
சங்கமமென்பது ஒரு வேகம்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment