
மலைச் சிகரத்தின் ஏகலில் நின்று
தேவதைகளின் இறகுகளைச் சேகரிக்கிறேன்
பெருங்காலொன்று என்னைக் கடத்திப் போகிறது
சாய்தவிடத்தில் இன்னிசையொன்று தட்டியெழுப்ப
மாகிரன் விழாவிற்குள் மன்மதம் அரங்கேற
இறகுகளை வீசியெறிந்து
வண்ணமழைத் தூவலில் நனைகிறேன்
யாக்கையின் சன்னல்கள் திறந்து கொள்கின்றன
மகிழம் கொடிகள்
தன்னிலைகளால் வருடும் நெகிழ்வில்
பூங்குயிலின் தாபம் தொண்டையில் சிக்கிக் கொள்கிறது
இலக்கணம் மேயும் புலவன்
சீர் பிரித்துக் கொண்டிருக்கிறான்
கை நழுவாக் கவிதையொன்று
கடலை உருவாக்கி கரையைத் தேடுகிறது
அழுத்தவிதிகள் நீச்சலைக் கற்பிக்க
நீந்துகிறவன் சற்றை இறந்து மிதக்கிறான்...
மீண்டும் பிறந்த போது
ஆடைகளை எடுத்துக் கொண்டு
அங்கிருந்து நகர்ந்திருந்தது அந்த மாய இருட்டு
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment