
கட்டுடைத்துக் கழல்கிறது மனம்
காவினில் களைவெட்டிக்கு என்ன பயன்
புன்னகை பூக்களை
யாரோ பறித்துப் போகிறார்கள்
ஆலயங்களின் வாசல்களில்
நிரம்பி வழிகின்றன பிரார்த்தனைகள்
ஆற்றுதலில் அழுகை நதி சங்கமிக்கிறது
தேறுதல்காரன்
எங்கோ தொலைந்து போகிறான்
மீட்சிமை அலைகளில்
மீண்டுவருகின்றன மீள் மீன்கள்....
ஏட்சியில்லா மனம் எரிதழலின் நாக்குகள்
எலி விரட்டி பூனை கொள்கிறது அச்சம்
கால் நழுவி கடல் நுழைகிறது வாழ்க்கை
படகு கவிழ்ந்து கிடக்க
துடுப்பு மட்டும் எங்கோ மிதந்து போகிறது
வழியும் தேன் துளிகளில் விஷக் கொடுக்குகள்
கண்களை மூடிக் காத்திருக்கிறது அமைதி
ஒரு சொல் போதும் ஓவென்று அழுதுவிட
- மு. முகமது பாட்சா
No comments:
Post a Comment