விலைச்சீட்டு
நம் மொழிக்கிடங்கின் சர்வ வல்லமையிலிருந்து இன்னும்
எடுத்துப் பிரகடனப்படுத்த முடியவில்லை.
ஒரு பேருண்மையின் வாசகத்தை
கால்களால் அளந்துகொண்டிருக்கும்
வெளிகள் யாவற்றுக்குமான
விளிம்புகளில் மரணஓலம்
கேட்கிறது
கூடு நோக்கி இழுத்துப்போகும்
தானியங்களைக்கைவிட்டுச்சிதறுகின்றன
எறும்புகள்
பறவைகளின் அனைத்து உல்லாசத்திற்குமான கீதங்கள் மாத்திரை
குறைந்து நெருடுகின்றன
தாவரங்களின் ஒவ்வொரு துளிர்ப்பும்
கண்காணிக்கப்படுகிறது
வர்ஷிக்கும் மழையின் துளிகள் ஒவ்வொன்றும் பேரம் பேசப்படுகிறது
உலகத்தின் கொண்டையில் விலைச்சீட்டு மேலும்
பண்டங்களுக்கு ஆகாத அச்சடித்த நாணயங்கள் பூமியில்
வீசப்பட்டுக்கிடக்கின்றன
சிலநேரம் இரு இமைகளுக்கு மத்தியில்
காரணங்கள் ஏதும் வேண்டியதில்லை
பிரமாண்டமான ஒரு பொய்யில்
ஆரம்பித்துவிட்டது இந்த உலகம்.
யவனிகா ஸ்ரீராம்
No comments:
Post a Comment