Saturday, 7 October 2017

அறுந்த செருப்புகள்

 படம் இதைக் கொண்டிருக்கலாம்: காலணிகள்

ஒரு ஜோடி செருப்புகள் 
இன்னமும் அங்கேயேதான் இருக்கின்றன, 
அதன் அறுந்த வார்கள் 
அவன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கின்றது, 
யாருக்கும் பயன் படாத செருப்புகளது, 
அதன் ஆயுள் பந்தம் 
அவனோடு மட்டுமே வாழ்ந்திருக்கும், 
அவனைத் தேடியலைய அவற்றால் முடியவில்லை 
அவனும் அதற்கு மேல் அலைய முடியாமல்தான் 
கழற்றி விட்டிருப்பான்... 
பிரிவுகளை எளிதில் சீரணிக்க முடிவதில்லை 
நிச்சயம் அழுதிருப்பார்கள், 
இவர்களின் கண்ணீர் 
நகரத்தின் வாழ்க்கையில் தொலைந்திருக்கும், 
அவரவர் வேலைகள் 
அவரவர்களைத் துரத்தியடிக்கின்றன, 
என் காலின் நைந்த செருப்புகள் மட்டும் 
அந்தச் செருப்புகளுக்காக 
ஏனோ சற்று நின்று நகர்கின்றது, 
யாருக்கும் தேவையில்லாத அச் செருப்புகளை 
இப்போது காணவில்லை... 
குப்பை வண்டிக்காரன் அள்ளிச் சென்றிருக்கலாம், 
அல்லது  யாரோவொருவன் 
கூவத்தில் தூக்கி வீசியிருக்கலாம் 
நேற்று கூட ஒரு பிணம் கூவத்தில் மிதந்ததாக 
நடைவாசியொருவன் சொல்லிவிட்டு நகர்கிறான்... 
இனி அந்தச் செருப்புகளும் 
அவனைப் போலவே காணாமல் போய் விட்டன.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts