
மரணம் வராதென்று
யாரும் என்னிடம் சொல்லவில்லை,
தொடர் சிகிட்சை தந்த மருத்துவர்
இரண்டு நாள் முன்புதான்
விபத்தில் இறந்து விட்டதாக
செவிலிப் பெண் சொல்லிவிட்டழுதாள்...,
நம்பாதவற்றைத்தான் நம்புகிறோம்
இறந்துவிட்டேன் என்று யாரும் அழாதீர்கள்,
என் கடிகாரம்
ஓடிக் கொண்டுதான் இருக்கிறது,
என் தாயின் இறப்பிற்கும்
அப்படித்தான் அழுதேன்....
அதற்குப் பிறகுதான்
இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்,
கஸ்தூரியைப் பூசி கபன் இடுகிறீர்கள்
சீக்கிரம் அடக்கி விடுங்கள்
அழுகலின் நாற்றம் பரவி விடும்,
துக்கங்களை
என் கல்லறையில் புதைத்து விடுங்கள்,
தின்றுவிடக் காத்திருக்கின்றன
கல்லறை புழுக்கள்,
பூச்செடியொன்றை நட்டு வையுங்கள்
அதுவாவது மணம் வீசட்டும்,
அதன் பிறகு அங்கு நிற்காதீர்கள்...
நானே அங்கு இருக்க மாட்டேன்,
உங்கள் தோட்டத்துக் காற்றில், பூக்களில்
என்னைக் கண்டால்
நிச்சயம் நான் உயிர்த்தே வாழ்கிறேன்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment