
சூழல்
அமைதியாக இருக்கிறது விற்பன்னனே
மல்லிகை விழுவதாய் மெல்லிய கீற்றை
வயலினில் இழையவிடு....
கண்களை மூடிக் கொண்டு காதுகளால் இரசிக்கிறேன்
காற்றினிசை தூக்கிப் பறக்கிறது,
இதயத்தின் ஓசையை
தபேலாவிற்கு இடம் மாற்றித் தட் தட் டென்றே இசை....
தட் தட் தட் தட் தட்
ஆகா !
சில்லென்ற காற்று கூந்தலைக் கலைக்கிறது
தூவல் இதயத்தில் கோர்த்து நிற்க
பியானோவின் கட்டைகளால் மெல்லத் தழுவு,
விரல்களின் அழுத்தத்தில் மீளுமிசையை
தென் பாடலாய் பதிவு இடு,
இதழ்களின் வீக்கத்தில் விழிகள் சிவந்திருக்க
நெஞ்சின் ஏற்ற இறக்கங்களை
ட்ரம்ஸினால்தான் உயிர்ப்பிக்க முடியும்,
பறக்கும் பட்டாம் பூச்சிகளும், மிதக்கும் ஊற்றும்
கரியின் கலவியும், கவிழும் நிழலும்
கூட்டட்டும் ஆயிரம் ஜலத ரங்கங்கள்....
மோர்சிங்கினிசையை இதழருகே மீட்டுகிறாய்
நாக்கு பத்திரமடா....
அனைத்தையும் ஏன் ஒன்றிணைக்கிறாய் விற்பன்னா?
நான்
தனித் தனியாகல்லவா கழன்று விழுகிறேன்....
இரக்கம் காட்டு,
இலுப்பை மரங்கள் பூக்களை உதிர்க்கின்றன
தேனீகள் மயக்கத்தில் கிடக்கின்றது...
மூச்சு வாங்கிக் கொள்வோம் வா
மூங்கிலிடம் உன் விரல்களைக் கொடுத்து விட்டு
மென் காற்றிடம் இசையை மாற்று
வளர் மஞ்சத்தில் ஓய்வெடுக்க
மெல்லிசையாய்
புல்லாங்குழல் மட்டுமே இப்போது இசைக்கட்டும்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment