
கவிதையொன்றை
கலைத்துவிட்டு உட்கார்ந்தவன்
ரம்மி சேரவில்லை,
வார்த்தைகள் போங்கு காட்டிக் குழப்பியது,
நீரில் நனைத்தெடுத்தான்
எழுத்துகள் பற்றிக் கொண்டெரிந்தன,
காதலாய் இருக்குமென
பூந்தோட்டத்தில் புதைத்தான்,
கல்லறையிலிருந்து
இரண்டு கழுகுகள் பறந்து சென்றன,
கவண் கொண்டு தாக்கினான்
சித்தார்த்தன் தடவலில்
அவை சிறகுலர்த்திக் கொண்டன,
புறாக்கள்தான் அவை...அவற்றை
வெள்ளைத்தாளில் முக்கியெடுத்தவன்,
அழகியின் காலடியில்
அடிமையாக உட்கார்ந்திருந்தான்,
யாரோ ஒருவன்
ஒரு வார்த்தையைப் பிடித்து ஓடி வருகிறான்...
ஓடி விடுங்கள் ஓடி விடுங்கள்
பிரளயம் அலையாய் திரண்டு வருகிறது,
சில வார்த்தைகள், சில வார்த்தைகளோடு
இவனையும் இழுத்துக் கொண்டோடுகின்றன,
கரை ஒதுங்கி நிற்கிறான்
கலைத்துப் போட்ட கவிதை
அவன் தலையைத் தடவி கொடுக்கிறது,
மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொள்கிறான்,
எளிதில் சிக்கினால்
நிச்சயம் நீ என் காதலியல்ல.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment