
நிறமொக்கிக் கனவில்
நீல் திரையாய் விரிகிறாய்
சுவாசத்தின் தழல் காற்று
சுழற்றியடித்து உயர்கிறது
தேகப் பெருமலையில்
தேன் நதிகள் ஊற்றெடுக்க
மேகதீபம்
வெளிச்ச நதி பாய்ச்சுகிறது
ஒற்றெடுத்துப் போகிறவன்
கண்களைக் கழற்றி வைக்கிறான்
அமரமின்றிப் படகு
அழகாய் நகர்கிறது
வீங்கும் பெருஞ்சுனையில்
தேறலமுது சுரக்க
மயங்கின வழிப் போக்கன்
வழி தெரியாமல் அலைகிறான்
கதவில்லா வாசலில்
வாதுமை மரம்
பூரித்து வளர்கிறது
அம்பரமிழந்த பூமி
தெளிந்து மஞ்சள் பூச
புது யுகத்தின் பிரசவம்
வெண்படலம் தழுவித்தான் நழுவுகிறது
கனவைக் கழற்றி விட்டு
கண்ணயர்கிறேன்
காணாமல் போய்விடு கள்வனே
மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment