
போகியின் சாம்பலில்
உயிர்த்தெழுந்த பறவைகள்
சண்டையிட்டுக் கொள்கின்றன
வேலம் பிசினியில்
உயிர் துளிர்த்த யுகமொன்று
மெல்லென வழிய
குருமிளகின் கொடிகள்
வேர்களை ஊன்றி
பூமியில் எதையோ தேடுகின்றன,
நகர இரைச்சல்களின் பேருந்துகளில்
நாட்காட்டித் தாள்கள்
கிழிக்கப் படுகின்றன,
மூச்சிறைக்கும் ஆலைகளில்
உட்கார்ந்திருக்கிறது
ஒரு யுக சமுத்திரத்தின் பேரலறல்,
வல்லூறுகளின் சிறகுகளிளெல்லாம்
தேசத்தின் பெயர்கள்
பொறிக்கப் பட்டுள்ளன,
அவை எச்சமிட்ட வட்டங்களில்
இரத்த புஷ்பங்கள்
முகைத்து மலர,
தொடர்பறுந்த ஊடகக் கம்பிகளில்
வழலை மந்திரம் மட்டுமே
வாசிக்கப் படுகின்றது,
அபய வாசிகள் எல்லோரும்
கடவுளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்
சிறு மிளகின் பூவாசமும்
வேம்பின் காற்றும் மெல்லென வீசும் போது
தோண்டிப் பார்க்கலாம்
தொலைந்து போன பெரும் யுகத்தை
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment