
அவளொரு பசி மிருகம்
முதலில் இறக்கைகளை விரித்த போது
பறவை என்று மட்டுமே நினைத்தேன்
படுக்கையை முழுவதுமாகச் சுற்றி வருகிறாள்
இறக்கைகளின் சப்தம்
இராட்சசமாய்க் காதுகளை அறைகிறது
ஓங்கியறைந்த போது
என் கன்னம் மட்டுமே சிவந்திருந்தது
இப்போது
அவளொரு டிராகனாக மாறியிருந்தாள்
கண்களில் இரத்த பசி மிகக் கொடூரமானது
போர்வைக்குள் பதுங்கிக் கொள்கிறேன்
கனவைப் பிடுங்கி வெளியே எறிகிறாள்
கழுகாய் மாறினாள் கொத்தி தின்பதற்காக
வேட்டையாடக் கிளம்புகிறேன்
அதற்கு முன் அவளொரு கதை சொல்கிறாள்
கடவுளென்ற நம்ரூதுக்கும்
அவள்தான் கடவுளாக இருந்ததாக...
விஷ வாயுக்களை வீசியடிக்கிறேன்
வீரியம் பெற்றதாகச் சிரிக்கிறாள்
என்னை நானே அடித்துக் கொள்கிறேன்...
கண் மாய்த்து காதலியானவள்
மெல்ல இரத்தத்தை உறிஞ்சுகிறாள்
இயலாமை வீரத்தின் அடையாளமல்லவே
சாகடிக்க முடியவில்லை
நான் மட்டும் இறந்து கொண்டிருக்கிறேன்
டெங்கு காய்ச்சலென்கிறார்கள்
அவள் போகும் போது சொல்லிவிட்டுப் போனது
இன்னமும் நினைவில் நிற்கிறது
கொதுகு என்பது மட்டமான உவமையல்ல.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment