
என் இரவின் வானம்
மிகச் சிறியது
போர்வைக்குள்
சில கற்பனைகளை
உள்ளடக்கி வாழ்கிறது
நேசங்களை வரவழைத்து
பூச்செண்டுகளைக் கொடுக்கிறது
துரோகங்களை இழுத்துவந்து
துப்பாக்கியால் சுடுகிறது
என் இரவின் வானம்
மிகச்சிறியது
வெள்ளைத் திண்டுகளில் சாய்ந்து
கசல் பாடுகிறோம்
வலை வீசாமல்
வலிய விழுகின்றன வார்த்தைகள்
சமையல்காரன்
சாகசம் செய்கின்றேன்
என் இரவின் வானம்
மிகச் சிறியது
பூக்களையெல்லாம் நெய்து
புது உருவாக்குகிறேன்
வாசம் அள்ளி முயங்கி
மழையாய்ப் பொழிவுறுகிறது
நேசக்காரியை இழுத்துவர
நேரம் எனக்குத் தேவையில்லை
அழுக்கான பகலை
துவைத்து அலசிக் கொண்டிருக்கும்
என் இரவின் வானம்
மிகச் சிறியது
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment