
எதை இங்கு
எடுத்து வந்தாய்?
எதை நீ
கொண்டு போகப் போகிறாய்?
-நியாயத்தின் சம்பளமே
நிலையானது...
பாவத்தின் சம்பளத்தில்
ஏன், புரளுகிறாய்?
-ஹுதாமை
உனக்குத் தெரியுமா?
......அது அல்லாஹ் வின் நெருப்பு.....
-நரகத்தின் தீயில்
நாசமாய் போகவா,
பாவத்தின் போர்வையில்
பதுங்கிக் கொள்கிறாய்?
-தேடலில் தான்
தொலைகிறாய் என்பது
புரிய வில்லையா?
-ஹாவியா தன் வாயை
அகலமாய்
திறந்து வைத்திருப்பது
இன்னமுமா தெரிய வில்லை?
-ஒரு திடுக்கத்திலும்
நடுக்கத்திலும்
காணாமல் போவாயே !
அப்போது
உன்னோடு, எது வரும்?
-பாவத்தின் போர்வை
மகஷரின் வெப்பத்தை
தணிக்கவா போகிறது?
-தீர்ப்பின் நகலை
முதுகு புறத்தில் வாங்க
ஆசைப் படுகிறாயா?
-பாவத்தில் உழன்றுக் கொண்டு
புண்ணியம் பேசுகிறாயே,
சாக்கடையில் நீந்திக் கொண்டு
சுத்தத்தை தேட முடியுமா?
-இனியாவது திருந்து!
இல்லையென்றால்
இருக்கிறது
ஹாவியாவின் விருந்து!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment