Saturday, 28 October 2017

நான் இரசித்த கவிதைகள் - 89

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

கூடல்

நீல் ஆம்பல் ஆழ்ந்த நித்திரையில் இருப்பது போல் 
அருகிலிருக்கிறாய்
இமைகளை உனது இதய ஓசையின் மீது
அசைத்து அசைத்து
ஆசைகளைத் திறக்க முயற்சிக்கிறேன்
எனது நடுமுதுகில் உன் நடுவிரலின் ஒரு புள்ளி 
முற்றுப்புள்ளி இல்லாத முத்தங்களைத் துவக்கும் 
தூங்கா ஆசையின் தூதென விழுகிறது
திடுக்கிட்ட முகம் 
குலமுதல் தெய்வத்தை 
கும்பிடக் கனிவதென உன் மார்பில் சாய்கிறது
வெண்சங்கை வெள்ளைக் கிளியெனத் தீண்டுகிறாய்
சிவப்பணுக்கள் செங்கொடுவேலிப் பூக்களெனப் பூக்கின்றன
சிபாருக வனத்திற்கு 
ஈருடல்கள் ஒருமனதாய்ப் பறக்கின்றன
உனது விரல்களின் முத்தங்களில் 
பனித்துளிகளின் பிம்பங்களே இல்லை
மூச்சுக் காற்றில் ஊறிப் பெருகும் அவை 
இருளுக்குள் ஒளியையும் 
ஒளிக்குள் இருளையும் உட்புகச் செய்கின்றன
இடையின் சரிவில் இராஜ முத்திரைகளை
வரைகிறாய்
எனது விருப்பத்தின் ஆரணம் உன் முகம் என்றும்
விழுதென உள்ளே நிலைத்தது உன் அகம் என்றும்
சொன்னால் நம்புவாயா
உனது பார்வைகள்
பசியை விளைவிக்கும் சாயவேர்கள் கொண்ட நிலம்
இந்நேரப் புன்னகை 
புலன் வெளிப் பித்த மண்டலத்தின் புனித ஊற்றைத் திறக்கவல்லது
உனது உடலின் காந்தியில் கைவளையல்களை 
உருள விடுகிறேன்
காதுமடல் ஏன் கூடலைக் கணிதமாக்குகிறது 
கழுத்தில் ஓடும் நரம்புகள் ஏன் 
அத்தனை நடன முத்திரைகளையும் கேட்கிறது
உனக்கென் ஆராவமுதூட்டும் வேளை 
உலகின் சர்வமழை படைக்கும் கீர்த்தனை ஒன்றில்
நனைகிறோம்
உதடுகளிலிருந்து கரையேற மனமின்றி 
கடலின் உடலில் வானமெனப் படர்கிறாய்
மெய்நீர்மை உணர்கிறோம்

- கவிஞர் தேன்மொழி தாஸ்

No comments:

Post a Comment

Popular Posts