Tuesday, 3 October 2017

வாய்க்கரிசி விவசாயம்

தானியங்கு மாற்று உரை இல்லை.


கால்களைக் கழற்றியெடுத்துக் கொண்டு ஓடுகிறோம், 
தேநீர்க் கடையில் பெட்ரோல் குடித்துக் கொண்டிருந்தவர்கள் 
எங்களை விரட்டிக் கொண்டு வருகிறார்கள், 
அமில மழையினில் ஆடுகள் 
ஹைட்ரோ கார்பனை சுவாசித்துக் கொண்டிருந்தன, 
அணு உலைகளின் மின்சாரங்களை 
வாளிகளிலேந்தி 
அம்பானி கடைக்கு ஊற்றிக் கொண்டிருக்கும் 
தொழிலாளிகளின் முதுகில், 
மேக் இன் இந்தியா முத்திரை குத்தப்பட்டிருக்கிறது, 
டெங்கு கொசுக்களோடு விளையாடுகின்ற சிறுவர்கள், 
எங்களையும் அழைக்கிறார்கள், 
ஜெயலலிதா மீண்டு வந்துவிட்டாத 
எட்டாவது சங்கீதம் வாசிக்கப் படுகிறது, 
ஆன்மாவிற்கு அபிசேகம் நடக்க , சிவாஜியின் சிலை 
உருகிவழிகிறது, 
எம்.ஜி.ஆர். மீண்டும் இறந்துவிட்டாராம். 
எல்லோரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் 
தூபக்கால் புகையில் நாற்காலி சண்டை நடக்கிறது, 
வயல்களில் வாய்க்கரிசி விதைக்கச் சொல்லி, 
பசுமை இந்தியாவின் பேனரில் 
பிரதமர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்... 
கண்களை வீசியெறிகிறோம், 
தூய்மை இந்தியா அழகாக ஒளிர்கிறது , 
தாஜ் மகால் வண்ணங்கள் பூசிக் கொள்ள, 
வெண் புறாக்களுக்கு 
சாயம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் 
காந்தி கை மாறிக் கொண்டேயிருக்கிறார். 
முதல்வராகிவிட்ட நடிகர் 
கண்களைப் பின்னந்தலையில் வைத்துக் கொள்ள 
ஊடகங்கள் குருடாகி அவர் பின்னால் திரிகின்றன, 
பேனாக்கள் இரத்தம் சிந்தி கிடப்பதை 
பூக்கள் தூவி வரவேற்கிறோம் 
முகங்களைக் கழற்றி வைத்துவிட்டு 
இப்போதுதான் கைகளைத் தேடத் தொடங்கினோம், 
இரவு பிச்சைக்காரன், அவை இறந்துவிட்டதாகவே 
பாடிக் கொண்டு செல்கிறான். 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts