
கொம்பேறி மூர்க்கன் நகர்ந்து செல்கிறான்
கோடாங்கிக்காரன் குறி சொல்கிறான்
அமரியுப்பு தேசமெங்கும் பூத்துக் கிடக்கிறது
வம்பலறியா ஆட்டுக் கூட்டங்கள் அலைகின்றன
மேய்ப்பன் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான்
மந்தனின் பாசக்கயிற்று எரி நாக்குகளின்
நிந்திதம் மெய்ம்மையை அறுத்தெறிகிறது
அய்யோ அய்யோ என்று பதறும் உள்ளங்களில்
புளிகம் ஊர்ந்து வழிய
கண்ணார்கள் பல்லக்கில் போகிறார்கள்
கழுத்தில் உட்கார்ந்து காட்சியளிக்கின்றனர்
கட்செவியர்கள்
பூசை நடத்துகின்றன இராசரிகம்....
இறந்தவர்களை
வேள்வித் தீ எரித்துக் கொண்டிருக்கிறது
வாருங்கள்
சாந்த ஊர்கோலம் சத்தமில்லாமல் போவோம்
கொம்பேறி மூர்க்கன் நகர்ந்து செல்கிறான்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment