Friday, 6 October 2017

ஆயுதம் தாங்கும் கவிதை

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஓ என் அழகிய கவிதையே 
கைகளில் ஆயுதம் இருக்கிறதா என்றால் ஒப்புக் கொள், 
பாலைவனத்தில் நீர் தேடி அலைகிறாயா என்றால் 
ஆமாம் என்று சொல், 
ஆதாம் உடலின் களிமண் கூட மிச்சமில்லை 
எங்களின் இரவுகளுக்கும் வெளிச்சமூட்ட 
யாரும் வருவதில்லை, 
மேகங்கள் கூட 
வெண்புறாக்களை வரைவதற்குப் பயப்படுகின்றன, 
காலின் கீழ் புதைந்திருக்கும் பிணங்கள் 
நிம்மதியாக இறக்கவில்லை, 
தேவ சங்கீதத்தின் வெளிப்பாடுகள் இடையேதான் 
துப்பாக்கி குண்டுகளின் ஓசையும் கேட்கிறது, 
முடிவிலிருந்து எழுதப்பட்ட கதையில் 
முகப்புப் பக்கத்தை யார் வாசிக்கப் போகிறார்கள்? 
பூமியில் பொத்தல்களைப் போட்டு விட்டு 
மழைக்கு யாகம் செய்கிறார்கள், 
பகலில் உடல்களை அங்கேயே விட்டுவிட்டு நடக்கிறோம் 
இரவில் உடல்கள் மட்டுமே மிச்சமாய் உறங்குகின்றன, 
எங்களின் கவிதைகளாவது விழித்திருக்கட்டும் 
விழி திறக்கட்டும் 
அவையொன்றும் எங்களைப் போல் நடுங்குவதில்லை... 
ஓ என் அழகிய கவிதையே 
கைகளில் ஆயுதம் இருக்கிறதா என்றால் ஒப்புக் கொள்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts