பிரபஞ்சத்தின் ரேகைகளில்
ஒரு சொல் ஓடிக் கொண்டிருக்கிறது,
ஒரு சொல்லில் நுழைந்து
மறு சொல்லில் வெளியேறுகிறேன்,
சொற் கூட்டங்கள்
என்னைச் சிறை பிடிக்கின்றன,
காற்றிலிருந்த சில கந்தகச் சொற்கள்
எரிமழை பொழிகின்றது,
வார்த்தைகளின்
வரம் வேண்டி யாகம் செய்பவன்
எழுத்துகளில் இடறிக் கொண்டிருக்கிறான்,
பூக்காத மொட்டுகளில் இன்னமும்
சில சொற்கள் பொதிந்தே கிடக்கின்றன,
புன்னகையை மொழி பெயர்க்கும் கவிஞர்கள்
அதன் முகவரியை
தேடிக் கொண்டேயிருக்கிறார்கள்,
மாய்மால எழுத்துகளில்
மாலையைக் கோர்த்துக் கொண்ட சொற்கள்
வஞ்சகத்தின் பதுங்கு குழிகள்,
மௌனத்தில் உறங்கும் சொற்களை
எப்படித்தான் எழுப்புவது?
வலைகளுக்குள் சிக்காத வார்த்தைகள்
நீந்திக் கொண்டிருக்கின்றன,
நதியிலோடும்
சருகுகளின் வார்த்தைகளைக் கவனித்தீர்களா?
வார்த்தைகளைப் பிரித்து எழுதிப் பார்த்தால்
சில கவிதைகள் வரும்
கொஞ்சம் பயமும் சேர்ந்து வரும்...
கடிகாரத்தின் வார்த்தைகள்
எப்போதும் டிக் டிக் மட்டுமல்ல,
சொற் கூட்டங்கள்
நம்மையே சுற்றித் திரிகின்றன,
என்னவாக இருக்கும்
இப் பிரபஞ்சத்திலோடும் அவ் ரேகையின்
மறைமுகச் சொல் ?
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment